.சி.ஆர்.சி (ICRC) இணையப் பாதுகாப்புச் சம்பவம்

 

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமானது (ICRC), அதன் இணையச் சேவை வழங்கிகளில் (சர்வர்களில்) ஏற்பட்ட ஒரு இணையவழித் தாக்குதலைப் பற்றி 18 ஜனவரி 2022 அன்று அறிந்துகொண்டது; இத்தாக்குதலின்போது, அதிநவீன, அறியப்படாத இணையவழி ஊடுருவற்காரர் (ஹக்கர்) ஒருவர் (செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அப்பாற்பட்டவர்), 'குடும்ப இணைப்புகளை மீட்டமைத்தல்' (Restoring Family Links - RFL) என்ற தரவுத்தளத்திற்கான அணுகலைப் பெற்றிருக்கிறார்.

இந்தச் சம்பவமானது 20 ஜனவரி 2022 அன்று ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.

புதிய தகவல்கள் கிடைக்கும்போது, இந்தப் பக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை நாம் தொடர்ந்து வழங்குவோம்.

உங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்பட்டால், அல்லது ஒரு மொழிபெயர்ந்துரைப்பாளர் தேவைப்பட்டால், வாரத்தில் 7 நாட்களும் ஒரு நாளில் 24 மணிநேரமும் அர்ப்பணிக்கப்பட்ட எங்கள் அவசர இணைப்பைப் பின்வரும் எண்ணூடாகத் தொடர்பு கொள்ளவும் 1800 860 442

சர்வதேச அழைப்பாளர்கள், தயவுசெய்து பின்வரும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்+61 2 8077 2507

.சி.ஆர்.சி (ICRC) இணையப் பாதுகாப்புச் சம்பவத்தைப் பற்றி

என்ன நடந்தது?

செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் செம்பிறை இயக்கத்திலிருந்து (Red Crescent Movement) சேவைகளைப் பெறும் 500,000-க்கும் மேற்பட்ட நபர்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்கும் இணையச் சேவையகங்கள் (சர்வர்கள்), அதிநவீன இணையவழித் தாக்குதலுக்கு உள்ளானதை .சி.ஆர்.சி (ICRC) கண்டறிந்துள்ளது. ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கமானது, இந்தத் தரவுத்தளத்தை எங்கள் ஆர்.எஃப்.எல் (RFL) மற்றும் தடுப்புக் கண்காணிப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறது. தரவுத்தளத்தில் ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் பதிவேற்றிய தகவல்கள் குறிப்பாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளனவா என்பது பற்றி எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் செம்பிறை இயக்கக் குழுவினர், உலகளாவிய ரீதியில் இத்தரவுத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர்; அத்துடன், தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள், எந்த நாட்டிலிருந்தும், நாங்கள் பணிபுரிந்த எந்தவொரு வழக்கிலிருந்தும் பெறப்பட்டனவாக இருக்கின்றன.

நீங்கள் ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்கிய தகவல், தரவுத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கலாம். இது, தகவல் ஒரே இடத்தில் வைத்திருக்கப்படுவதை உறுதி செய்வதற்கான நிலையான உட்செயல்முறை ஆகும். மேலும், காணாமல் போன அன்புக்குரியவர்களைக் கண்டறிய நாங்கள் முயற்சிக்கும்போது, பிற நாடுகளில் உள்ள எங்கள் கூட்டாளர்களுடன் தொடர்பு கொள்ள இது எமக்கு உதவுகிறது.

இந்தத் தகவலில் உங்கள் பெயர், உங்கள் தொடர்பு விவரங்கள், காணாமல் போன உங்கள் அன்புக்குரியவரின் சூழ்நிலைகள் பற்றிய தகவல்கள், அத்துடன் நீங்கள் எங்களிடம் கூறிய உங்கள் உறவினர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்கள், அல்லது நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சூழ்நிலைகள் மற்றும் நீங்கள் தெருவித்த கவலைகள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கும். உங்கள் வழக்கை நிர்வகிக்கும் போது எங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் இதில் அடங்கும், அதில் அடையாள ஆவணங்கள், உட்சேர்க்கும் படிவங்கள், ICRC-இன் தடுப்புச் சான்றிதழ்கள் (Attestation of Detention certificates), குடும்ப உறுப்பினர்களிடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட செஞ்சிலுவைச் சங்கச் செய்திகள் (Red Cross Messages) மற்றும் புகைப்படங்கள் ஆகியவை உள்ளடங்கலாம்.

உங்கள் தனிப்பட்ட தகவல்கள் நீக்கப்பட்டதற்கான அல்லது சிதைக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். மேலும், இந்தத் தரவைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான அல்லது பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்கான எந்த ஆதாரத்தையும் நாங்கள் இன்னும் அடையாளம் காணவில்லை. இது நெருக்கமான மதிப்பாய்விற்கு உட்பட்டுள்ளது, மேலும் இந்த நிலை மாறினால் அது பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்.

இந்தச் சம்பவத்திற்குப் பதிலளிக்கும் விதமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

இந்தச் சம்பவத்தைப் பற்றி .சி.ஆர்.சி (ICRC) அறிந்தவுடன், பாதிப்புக்குள்ளான சேவையகங்களை (சர்வர்களை) இணையத் தொடர்பில்லா நிலைக்கு (ஆஃப்லைன்) அது மாற்றியுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், தற்போது எங்களால் எந்த வழக்குத் தொடர்பான தகவலையும் அணுகவோ அல்லது எந்த வழக்குகளிலும் வேலை செய்யவோ இயலாது.

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கும் வகையில் உலகளவிய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் செம்பிறை (Red Crescent) குழுக்களை செயல்படுத்த, குறுகியகாலத் தீர்வுகளை அடையாளம் காணும் பணியில் .சி.ஆர்.சி (ICRC) உள்ளது.

தனிப்பட்ட முறையில், ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கமானது, உள்ளூர் அமைப்புகள் மற்றும் சேவைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஒரு சுயாதீன மதிப்பாய்வை மேற்கொண்டுள்ளது.

பாதிப்புக்குள்ளாயிருக்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், இதேபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம்.

நாங்கள் ஏன் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்?

பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேவைகள் தொடர்பாக நாங்கள் உங்களுடன் பணியாற்றிய காரணத்தால் நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்:

 • போர், பேரழிவு அல்லது இடப்பெயர்வு காரணமாகக் காணாமல் போன குடும்ப உறுப்பினரைக் கண்டறிதல்.
 • தொடர்புகொள்ள வேறு வழிகள் இல்லாத உறவினருக்குச் செய்திகளை அனுப்புதல்.
 • உங்களால் அணுக முடியாத, வெளிநாட்டில் இருக்கும் உறவினரின் நலனைச் சரிபார்த்தல்.
 • ஒரு நபரைப் பற்றிய ஆவணங்களைக் கோருதல்.
 • குடிவரவுத் தடுப்பு இடவசதிகளின் நிலைமைகளைக் கண்காணித்தல். (தடுப்புக்காவலில்)

இந்தச் செயற்பாட்டின் போது, நீங்கள் அல்லது உங்கள் அன்புக்குரியவர்கள் எமக்கு வழங்கிய சில தகவல்கள் இந்தச் சம்பவத்தின் விளைவாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதனால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடிய, மற்றும் இது பற்றித் தெரியாமல் இருக்கக்கூடிய உங்கள் அன்புக்குரியவர்களுடன் இது பற்றித் தயவுசெய்து பேசவும்.

ஆர்.எஃப்.எல் (RFL) தரவுத்தளம் என்றால் என்ன?

(ஆர்.எஃப்.எல்) RFL தரவுத்தளமானது, ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற செஞ்சிலுவைச் சங்கங்கள் மற்றும் செஞ்சிலுவைச் செம்பிறைச் சங்கங்களால் பின்வருபவற்றிற்காகப் பயன்படுத்தப்படுகிறது:

 • காணாமல் போனவர்களைக் கண்டறிய உதவுதல்.
 • வேறொரு நாட்டில் உள்ள உங்கள் உறவினர்களுடன் பரிமாறிக்கொள்ளப்பட்ட செய்திகள் உட்பட, ஆர்.எஃப்.எல் (RFL)
 • வழக்குகள் பற்றிய தகவலைப் பகிர்தல் மற்றும் சேமித்தல்.
 • குடிவரவுத் தடுப்புக்காவலில் உள்ளவர்களால் எமக்குத் தெருவிக்கப்பட்ட மனிதாபிமானப் பிரச்சினைகளைப் பதிவு செய்தல்.
 • குடிவரவுத் தடுப்புக்காவலில் உள்ளவர்களுடனான தகவற்தொடர்புகளைச் சேமித்தல்.
 • உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்குமான ஆதரவுகள் (உங்களுடன் கலந்துரையாடப்பட்டவை) தொடர்பாக நாங்கள்
 • மேற்கொண்ட பரிந்துரைகள் பற்றிய தகவலைப் பதிவு செய்தல்.

ஆர்.எஃப்.எல் (RFL) தரவுத்தளமானது ஜெனீவாவில் பேணப்பட்டு (ஹோஸ்ட் செய்யப்பட்டு) .சி.ஆர்.சி (ICRC)-ஆல் நிர்வகிக்கப்படுகிறது.

உங்களின் தனிப்பட்ட தகவல்களை ஏன் .சி.ஆர்.சி (ICRC) வைத்திருக்கிறது?

'குடும்ப இணைப்புகளை மீட்டமைத்தல்' (Restoring Family Links - RFL) என்பது உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வழங்கப்படும் ஒரு உலகளாவிய சேவையாகும். ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் உட்பட, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கங்கள், ஆர்.எஃப்.எல் (RFL) வழக்குகள் பற்றிய தகவல்களைச் சேமிக்க ஒரு நிகழ்நிலை (ஆன்லைன்) அமைப்பைப் பயன்படுத்துகின்றன. நாங்கள் இதைச் செய்வதற்கான காரணங்கள், தகவலானது பாதுகாப்பாக ஒரே இடத்தில் சேமிக்கப்படவேண்டும் என்பதும், காணாமல் போன உங்கள் அன்புக்குரியவரைக் கண்டறிய முயற்சிக்கும்போது மற்ற நாடுகளில் உள்ள எங்கள் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்பதுமே ஆகும்.

குடிவரவுக் காவலில் உள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் போதும் நாங்கள் இந்த அமைப்பைப் பயன்படுத்துகிறோம்.

உங்களுடைய எந்தத் தனிப்பட்ட தகவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன?

ஆர்.எஃப்.எல் (RFL) தரவுத்தளத்தையும், அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் வழங்கும் .சி.ஆர்.சி (ICRC) இணையச் சேவையகங்கள் (சர்வர்கள்) பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இணையவழி ஊடுருவற்காரர்கள் (ஹேக்கர்ஸ்), இந்த இணைய அமைப்புக்குள் பிரவேசித்திருந்தனர், மற்றும் தகவல்களை நகலெடுத்து ஏற்றுமதி செய்யும் திறனைக் கொண்டிருந்தனர். ஆர்.எஃப்.எல் (RFL) தரவுத்தளத்தில் ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் பதிவேற்றியிருந்த தகவல்கள் குறிப்பாகப் பாதிப்புக்குள்ளாகினவா என்பது பற்றி எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடிய தகவல்களில், உங்கள் வழக்குத் தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் பதிவுகள், அத்துடன் உங்கள் வழக்குடன் தொடர்புடையதாக இருந்திருந்தால், உங்கள் அன்புக்குரியவர்களின் தொடர்பு விவரங்கள் ஆகியவை அடங்கும். எங்களுக்குத் தெரிந்தவரை, இதுவரைக்கும் இந்தத் தகவல்கள் வெளியிடப்படவோ அல்லது வர்த்தகம் செய்யப்படவோ இல்லை; இதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்

உங்களையும் உங்கள் தனிப்பட்ட தகவலையும் பாதுகாக்க எவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கலாம்?

உங்கள் தொடர்பு விவரங்களை மூன்றாம் தரப்பினர் அணுகினால், பின்வருபவற்றை மேற்கொள்வது அவசியம்:

 • கடவுச்சொற்களை (பாஸ்வேர்ட்) மாற்றவும் - நீங்கள் ஏற்கனவே உங்கள் நிகழ்நிலை (ஆன்லைன்) கடவுச்சொற்களை மாற்றவில்லை என்றால், அதை முதலில் மாற்றவும். மற்றைய கணக்குகளுக்கான கடவுச்சொற்களை உங்களுக்கு நீங்களே மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தால், அவற்றையும் மாற்றவும். ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்பு மையமானது (Australian Cyber Security Centre) நல்ல கடவுச்சொற்களுக்கான வழிகாட்டுதலை வழங்குகிறது.
 • எச்சரிக்கையாக இருங்கள் - இணைய முகவரியில் உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால், உங்கள் சேவை வழங்குநரைத் தொடர்புகொண்டு, நீங்கள் சரியான பக்கத்திற்குள்தான் உள்நுழைகிறீர்களா என்பதை உறுதிசெய்யவும். உங்கள் உள்நுழைவு விவரங்களை வழங்க வேண்டாம்.

 • கூடுதல் பாதுகாப்புகளைச் செயற்படுத்தவும் - முடிந்தவரை உங்கள் நிகழ்நிலை (ஆன்லைன்) கணக்குகளுக்கு 'பல-காரணி அங்கீகாரம்' (multi-factor authentication) என்ற பாதுகாப்பு முறையைச் செயற்படுத்தவும், மற்றும் ஆன்லைன் கணக்குகளை அணுக நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு சாதனத்திலும் புதுப்பிக்கப்பட்ட வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் ஒன்று நிறுவப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்.

 • இணைப்புகளைச் சரிபார்க்கவும் - உங்கள் உள்நுழைவுச் சான்றுகளைக் கேட்கும் ஒரு வலைப்பக்கத்தில், 'யூனிஃபார்ம் ரிசோர்ஸ் லொக்கேட்டர்' (Uniform Resource Locator) அல்லது 'URL' என அழைக்கப்படுவதைக் கவனியுங்கள். இது உங்கள் இணைய உலாவியின் (browser) முகவரிப் பட்டியில் (address bar) அமைந்துள்ளது, அத்துடன் இது பொதுவாக ‘https://’ என்று தொடங்கும்.

 • கையடக்கத் தொலைபேசி இணைப்பு பாதிப்புக்குள்ளாதல் - வழக்கத்திற்கு மாறாக, அல்லது இணைப்பை நிறுத்துமாறு உங்கள் தொலைபேசிச் சேவை வழங்குநரை நீங்கள் கேட்காமலே, வலையமைப்புடன் (நெட்வொர்க்குடன்) உங்கள் தொலைபேசி இணைக்கப்படவில்லை என்று அறிந்தால் எச்சரிக்கையாக இருங்கள். இவ்வாறு நிகழும்போது, இந்தச் சிக்கலைப் பற்றி உங்கள் தொலைபேசிச் சேவை வழங்குநருக்கு உடனடியாக எச்சரிப்பதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

 • இணைய மோசடியைக் கண்காணிக்கும் (Scamwatch) வழிகாட்டுதலை மதிப்பாய்வு செய்யவும் – மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நீங்கள் ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையத்தின் (Australian Competition and Consumer Commission) இணைய மோசடியைக் கண்காணிக்கும் (Scamwatch) வழிகாட்டுதலை மதிப்பாய்வு செய்யலாம்.

உங்கள் அடையாளத்தைப் பாதுகாப்பது பற்றிய கூடுதல் வழிகாட்டுதலுக்கு, நீங்கள் ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்பு மையத்தின் (Australian Cyber Security Centre) வழிகாட்டுதல்களுக்கான பக்கத்தைப் பார்வையிட விரும்பலாம்.

இந்தச் சம்பவத்தின் முழு நோக்கத்தையும் எங்கள் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள விதத்தையும் புரிந்துகொள்வதில் நாங்கள் இன்னும் கவனமாகச் செயற்படுகிறோம். நீங்கள் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட ஆலோசனைகளை வழங்குவது உட்பட, தொடர்புடைய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தால், அவ்வாறான புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளானால், உங்களுக்குத் தெரிந்த மற்றும் நீங்கள் நம்பும் ஒரு பதிவுசெய்யப்பட்ட சுகாதார நிபுணரிடம் சுகாதார ஆலோசனையைப் பெறுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

கூடுதல் ஆதரவை நீங்கள் எங்கு பெறலாம்?

இந்த அறிவிப்பு மற்றும் சம்பவம் குறித்த ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால், அது தொடர்பாக உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் கூடுதல் ஆதரவு கிடைக்கிறது. இதில் பின்வருபவை அடங்கும்:

ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் (Australian Red Cross)

மேலே பட்டியலிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி எங்கள் அவசர இணைப்பை நீங்கள் அழைக்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு, வரவிருக்கும் நாட்களில் இந்த வலைப்பக்கத்தையும் பார்க்கவும்.

.டி.கேர் (IDCARE)

உங்கள் தனிப்பட்ட தகவல் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், ஆஸ்திரேலியாவின் 'தேசிய அடையாளம் மற்றும் இணையப் பாதுகாப்புச் சமூக ஆதரவுச் சேவை'யான IDCARE இலிருந்து இலவச ஆதரவை நாங்கள் உங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

உங்களுக்கு, பொதுவான அடையாளப் பாதுகாப்புப் பற்றிய கவலைகள் இருந்தால், IDCARE-இன் உதவியைப் பெறும் இணையப் படிவத்தின் மூலம் IDCARE-இன் வழக்கு மேலாளர் ஒருவரைத் தொடர்புகொள்ளவும்.

மாற்றாக, உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பது குறித்த கூடுதல் தகவல் மற்றும் ஆதாரவளங்களுக்கு, IDCARE-இன் கற்றல் மையத்தைப் பார்வையிடலாம். IDCARE-இன் 'உதவியைப் பெறும்' இணையப் படிவத்தை பூர்த்தி செய்யும் போது அல்லது பின்வரும் எண்ணை அழைக்கும் போது, RCA-ID22 என்ற பரிந்துரைக் குறியீட்டை வழங்குவதன் மூலம் IDCARE-இன் சேவைகளை அணுகலாம்:1800 595 160

உங்கள் சுகாதாரப் பயிற்சியாளர்

நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளானால், உங்களுக்குத் தெரிந்த மற்றும் நீங்கள் நம்பும் ஒரு பதிவுசெய்யப்பட்ட சுகாதார நிபுணரிடம் ஆலோசனையைப் பெறுமாறு பரிந்துரைக்கிறோம். உங்கள் பொது மருத்துவரை (ஜி.பி) நீங்கள் பார்க்கும்போது, உங்களுக்கு என்ன உதவி தேவை என்பதை அவர்கள் மதிப்பிடுவார்கள்.

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் எவ்வாறு இந்த நிறுவனங்களால் ஆதரவளிக்க முடியும் என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் மின்னஞ்சலை அணுகவும்.

Charity donations of $2 or more to Australian Red Cross may be tax deductible in Australia. Site protected by Google Invisible reCAPTCHA. © Australian Red Cross 2024. ABN 50 169 561 394